இப்படியும் உலக சாதனை செய்யலாமா? இணையத்தில் வைரலாகும் காணொளி!
ஈரானைச் சேர்ந்த நபர் ஒருவர் வெறும் ஸ்பூனை வைத்து உலக சாதனை புத்தகமான கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். மேலும் இதுதொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக மக்கள் மெய் சிலிர்க்க வைக்கும் சாகசங்கள் முதல் விநோதமான செயல்கள் வரை பலவற்றை முயற்சித்து செய்து வருகின்றனர். நீளமாக மீசை மற்றும் நகம் வளர்ப்பது, நீண்ட நேரம் முத்தம் கொடுப்பது, மலைக்க வைக்கும் அளவிற்கு உணவு உட்கொள்வது என ஆச்சர்யமான, வினோதமான பல சாதனைகளை பார்த்திருப்போம்.
அந்த வகையில் ஈரானைச் சேர்ந்த நபர் தனது உடலில் 85 ஸ்பூன்களை சமன் செய்து, கின்னஸ் புக் ஆஃப் ரெக்காட்டில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அன்றாட வாழ்க்கையில், நாம் அனைவருமே ஸ்பூன் சாப்பிட மட்டுமே பயன்படும் என நினைத்திருப்போம். ஆனால் அதை வைத்து யாராவது உலக சாதனை படைப்பார்கள் என சிந்திருக்க மாட்டோம். அப்படி கற்பனைக்கும் அப்பாற்பட்ட வகையில், ஈரானியர் செய்துள்ள இந்த விநோத சாதனை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதெல்லாம் ஒரு சாதனையா? ஸ்பூனை வைத்து என்ன விளையாட்டு என நினைக்கலாம். ஆனால் இதற்காக அந்த நபர் பல வருடங்களாக கடினமான முயற்சியும், பயிற்சியும் செய்து இதனை சாத்தியமாக்கியுள்ளார்.
ஈரானின் AKraj பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான அபோல்பாசல் சபர் மொக்தாரி சிறுவயதில் இருந்த தனது உடலில் ஸ்பூனை வைத்து சமன் செய்வதில் பயிற்சி பெற்று வருகிறார்.
சிறுவனாக இருக்கும் போது ஒருமுறை மொக்தாரி உடலில் ஸ்பூனை வைத்து பேலன்ஸ் செய்ய முடிந்ததை கவனித்தார். அதன் பின்னர் பல வருட பயிற்சி மற்றும் திறமை மூலமாக, உடல் முழுவதும் ஸ்பூனை நிலையாக நிற்க வைத்து, அதில் வெற்றியும் கண்டார்.
தொடர்ந்து தன்னுள் இருக்கும் இந்த தனித்திறமைக்கு உரிய அங்கீகாரம் பெற விரும்பிய மொக்தாரி, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்கு முன்னர் ஸ்பெயினைச் சேர்ந்த மார்கோஸ் ரூயிஸ் செபாலோஸ் என்பவர் 64 ஸ்பூன்களை உடலில் சமன் செய்து தான் முந்தைய கின்னஸ் சாதனையாக இருந்தது.
அதனை முறியடிக்க முடிவெடுத்த மொக்தாரி, தனது உடலில் 85 ஸ்பூன்களை சமநிலை செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதற்காக 50 வயதான மொக்தாரி 3 முறை விடாமுயற்சியுடன் முயன்று விஸ்வரூப வெற்றி அடைந்துள்ளார். தன்னால் ஸ்பூனை மட்டும் அல்ல பிளாஸ்டிக், கிளாஸ், பழங்கள், கல், மரம் என எதை வேண்டுமானாலும் தனது உடலில் ஒட்டிக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.