புத்தளத்தில் பெரும் சோகம்; ஒரே குடும்பத்தில் மூவரை பலியெடுத்த கொரோனா!
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வேப்பமடு பகுதியைச் சேர்ந்த தாயும், மகளும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சித்தி அஜிபா (வயது 51) மற்றும் அவரது மகள் பாத்திமா சஹானா (வயது 37) ஆகிய இருவருமே கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று (06) உயிரிழந்துள்ளதாக புத்தளம், கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்த குறித்த தாயும், மகளும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் குறித்த தாய் காலையும், அவரது மகள் அதே நாளில் நண்பகள் வேளையும் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த குறித்த தாயும், மகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவ்விருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த தாயினதும், மகளினதும் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குருநாகலுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து நல்லடக்கத்திற்காக ஓட்டமாவடிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, உயிரிழந்த சித்தி அஜிபா எனும் 51 வயதானவரின் கணவரான முஹம்மது நிஸ்தார் (வயது 56) என்பவரும் கடந்த 4ம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.