ஐயப்ப சுவாமி பக்தர்கள் மூவருக்கு ஆலயம் செல்கையில் நேர்ந்த பெரும் துயரம்
தமிழகத்தில் பழனி அருகே வரதமாநதி அணையில் குளித்தபோது நீரில் மூழ்கி ஐயப்ப பக்தர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஐயப்ப சுவாமி பக்தர்கள் பலரும் சபரிமலைக்கு மாலை அணிந்து சென்றுவரும் காலமாக தற்போது உள்ளது.
இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ராஜீவ் என்பவரது இரட்டை மகன்களான விக்னேஷ்(23), யோகேஷ்(23). அவர்களின் நண்பர்களான திருவேற்காட்டை சேர்ந்த ஹரீஷ்(23) மற்றும் காரைக்காலை சேர்ந்த கணேஷ்(21) சபரிமலைக்கு சென்றனர்.
குறித்த 4 பேரும் திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு ரயில் மூலம் சென்று, அதிகாலை பழனிஅருகே உள்ள வரதமாநதி அணையை சுற்றிப்பார்க்க சென்றனர். பின்னர், அங்குள்ள அணை பகுதியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஒருவர் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அவரை காப்பாற்ற மற்றவர்கள் முயன்றபோது மேலும் இருவர் தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
சுதாரித்துக்கொண்ட ஹரிஷ் என்பவர், இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அணையில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில், அப்போது, சென்னையை சேர்ந்த சகோதரர்கள் விக்னேஷ்,யோகேஷ் மற்றும் காரைக்காலை சேர்ந்த கணேஷ் ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதனையடுத்து பொலிஸார் மூவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து நடத்தி வருவதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.