பெரும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ள இலங்கை!
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் மாத்திரம் அல்லாது பொருளாதார வீழ்ச்சி, அதிகரித்த கடன் சுமை, உணவுத் தட்டுப்பாடு, உரத் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் நாடு பெரும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக தெஹிவளையில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது தமிழர் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எம். உதயகுமார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் தருவதாக கூறியிருந்தபோதிலும், வேலை செய்யும் நாட்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர். இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அன்றாடம் உழைத்து வருமானம் ஈட்டுவோர் மேலும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்காக அரசாங்கம் சிறந்த கட்டமைப்பொன்றை உருவாக்க தவறியுள்ளது. குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரசாங்கத்தால் வழங்ப்படும் 5,000 ஆயிரம் ரூபா நிவாரணம் எமது மக்களுக்கு கிடைக்கவில்லை.
மேலும், 2,000 ரூபா நிவாரணப் பட்டியலிலும் உள்ளடக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் தற்போது மலையக மக்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து அனுப்புவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இறக்குமதி இல்லாததன் காரணமாக நாட்டில் உணவுத் தட்டுப்பாடு நிலவுகிறது. உர இறக்குமதி இல்லாததால் விவசாயிகள் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். ஆகையால் நாட்டில் இறக்குமதி வருமானமின்மையால் நாடு பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு தள்ளப்பட்டு பாரிய கடன் சுமையால் தள்ளாடுகிறது" என்றார்.