முல்லைத்தீவில் அரச வாகனங்களில் இரவில் நடக்கும் கூத்துக்கள்; கண்டுகொள்வார் யாருமில்லையா!
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி, மது அருந்தியது மாத்திரமின்றி ஊடகவியலாளர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (7) இரவு பதிவாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நேற்று (07) இரவு 10 மணியளவில் முல்லைத்தீவு - மாங்குளம், பனிக்கன்குளம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியோரம் அரச வாகனங்களை நிறுத்தி வைத்து மது விருந்து
பனிக்கன்குளம் பகுதியில் உள்ள வன வளத் திணைக்கள அதிகாரி ஒருவரின் வீட்டில், மாவட்ட வன அதிகாரி உள்ளிட்ட குழுவினர் WP PD 3060 (நீல நிற கப் ரகம்) மற்றும் WP PF 9868 ஆகிய இலக்கங்களை உடைய இரண்டு அரச வாகனங்களில் வருகை தந்து மது விருந்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் மூன்றரை மணித்தியாலங்களாக வீதியோரம் அரச வாகனங்களை நிறுத்தி வைத்து இடம்பெற்ற இந்த மது விருந்தை ஊடகவியலாளர் செய்தி சேகரிக்க முற்பட்டபோது, போதையில் இருந்த மாவட்ட வன அதிகாரி அவதூறாகப் பேசி அவரைத் தாக்க முற்பட்டதுடன் பகிரங்க மிரட்டலும் விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் காடழிப்புச் செயல்களில் ஈடுபடும் 'மாபியாக்களிடம்' இலஞ்சம் பெற்றுக்கொண்டு, இவ்வாறான மது விருந்துகள் அரச அதிகாரிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுவதாகத் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
சம்பவம் குறித்து ஊடகவியலாளர் உடனடியாக மாங்குளம் பொலிஸார், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்குத் தகவல் வழங்கினார். எனினும், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரத் தாமதித்த நிலையில் அதிகாரிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கச் சென்ற ஊடகவியலாளரை, அங்கிருந்த பதவி நிலை அதிகாரி ஒருவர் ஒருதலைப்பட்சமாக அச்சுறுத்தியுள்ளார்.
அரச அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து சட்டவிரோதச் செயல்களுக்குத் துணை போவதாகக் குற்றம் சுமத்தியுள்ள ஊடகவியலாளர் , இவ்விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளார்.
இந்நிலையில் சமபவம் தொடர்பான விசாரணைக்காக இரு தரப்பினரும் இன்று (08) நண்பகல் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.