சிறுத்தைகளால் அவதிப்படும் மலையக மக்கள் ; கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை
நாட்டின் பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட், போடைஸ், கினிகத்ஹேன, பொகவந்தலாவ உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நாட்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
சில பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை சிறுத்தைகள் வேட்டையாடும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இது தொடர்பான சி.சி.ரி.வி காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதுடன், மிகுந்த அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன வனஜீவராசிகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி இதற்கான தீர்வு எட்டப்படும் என்று தெரிவித்தார்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள் சுரவீர, சிறுத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக கினிகத்ஹேன உள்ளிட்ட சில நகரங்களை அண்டிய குடியிருப்பு பகுதிகளிலும் சிறுத்தைகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த பகுதிகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
ஒரு புறம் சிறுத்தைகளை கொல்ல முடியாது என்பதுடன் மறுபுறம் பொதுமக்களின் உயிரையும் பாதுகாக்க வேண்டும். எனவே, இது மிகுந்த அவதானத்துடன் கையாள வேண்டிய பிரச்சினை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர தெரிவித்தார்.