அத்தியாவசிய பொருட்களின் விலையை மதிப்பாய்வு செய்யும் அரசாங்கம்
அரிசி, சீனி , பால்மா மற்றும் உள்நாட்டு எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை திருத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்போது அரிசி மற்றும் சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கையில், சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பாக நாங்கள் எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்றும், விநியோகச் சங்கிலியில் உள்ள சிக்கல்கள், இறக்குமதிகளுக்கு டொலர் பற்றாக்குறை மற்றும் ரூபா மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது.
இதன்போது சீனி மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா என வினவிய போது, தற்போது கையிருப்பில் உள்ள சீனி இரண்டரை மாதங்களுக்கு போதுமானது என்றும்,
நாங்கள் ஒரு கட்டத்தில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.