சுகாதாரத் துறைக்கு புதிய தாதியர்களை நியமிக்க அரசு திட்டம்
இலங்கையின் தாதியர் பணியாளர்களை வலுப்படுத்தும் நீண்டகால உத்தியின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 2,847 தாதியர்களைப் புதிய நியமனங்கள் ஊடாகச் சேவையில் இணைத்துக் கொள்ள சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாதியர் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற, 2021ஆம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்த தாதியர் மாணவர்களுக்கான பட்டமளிப்பு மற்றும் உறுதிமொழி ஏற்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த விசேட அறிவிப்பை வெளியிட்டார்.

அமைச்சரின் விபரங்களின்படி, 2030 ஆம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்தமாக 13,600 புதிய தாதியர்களைத் தேசிய சுகாதாரச் சேவையில் நியமிப்பதே அரசாங்கத்தின் இறுதி இலக்காகும் என்பதுடன், இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த இலக்கின் 50 சதவீதத்தை அடைய எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேலும் 1,949 தாதியர்களும், அதனைத் தொடர்ந்து 2028 ஓகஸ்ட் மாதத்தில் மேலும் 2,920 தாதியர்களும் சுகாதாரத் துறையில் புதிய நியமனங்கள் மூலம் உள்வாங்கப்படவுள்ளோம் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.