அரசின் அசட்டையே இன்றைய கிண்ணியா துயர சம்பவத்திற்கு காரணம்
திருகோணமலை கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் இன்று இடம்பெற்ற படகு விபத்தானது, அரசின் அசட்டை காரணமாகவே நடந்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. சபையில் சுட்டிக்காட்டினார்.
கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு விபத்து தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் இன்று சபையின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
இதன்போது, அரசின் அசட்டை காரணமாகவே இந்த துயர சம்பவம் இடம்பெற்றதாக ஹக்கீம் குற்றம் சுமத்தினார்.
முறையான வகையில் அந்தப் படகு பாதை சேவை நடைபெறவில்லை எனவும் சுட்டிக்காட்டிய ஹக்கீம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றியே கிண்ணியாவில் இந்தத் தரமற்ற தற்காலிக படகுப் பாதை இயங்கியுள்ளது எனவும், இது தொடர்பில் உடனடி விசாரணை வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, கிண்ணியா படகு பாதை குறித்து பல தடவைகள் சுட்டிக்காட்டியபோதும் அது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என இம்ரான் மஹ்ரூப் எம்.பி. சபையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.