வங்காள விரிகுடாவில் சூறாவளி; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, எதிர்வரும் 16ஆம் திகதியளவில் சூறாவளியாக வலுப்பெறக்கூடும் என்பதால் மீனவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுருத்தியுள்ளது.
இந்தக் குறைந்த காற்றழுத்தப் பகுதி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, நவம்பர் 15ஆம் திகதியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாகவும், பின்னர் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சூறாவளியாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை - 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று
இதனால் கடற்படையினரும் மீனவர்களும் வானிலை ஆய்வுத் திணைக்களம் வெளியிடும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் வடகிழக்கு அல்லது வடக்கு திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும், சில சந்தர்ப்பங்களில் அதன் வேகம் மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழையின்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது