கொழும்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் தொடர்பில் வெளியான தகவல்
கொழும்பு மாநகரசபையின் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் மீண்டும் 31ஆம் திகதி புதன்கிழமை சபைக்கு சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொழும்பு மாநகரசபை மேயர் விராய் கெலி பல்தசார் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூடியே இந்த தீர்மானத்தை மேற்கொள்ளனர்.
அதனடிப்படையில், ஏற்கனவே வாக்கெடுப்பில் தோல்வியடைந்த வரவு செலவு திட்டத்தை மீண்டும் சபைக்கு சமர்ப்பித்து அனுமதித்துக்கொள்வதற்காக புதன்கிழமை (31) காலை 10 மணிக்கு மாநகர சபை மேயர் விராய் கெலி பல்தசார் தலைமையில் மாநகர சபை கூடவுள்ளது.

வரவு செலவு திட்டம்
காெழும்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் கடந்த 22ஆம் திகதி திங்கட்கிழமை சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட பின்னர், இடம்பெற்ற வாக்கெடுப்பில் 57 - 60 என்ற அடிப்படையில் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது. உள்ளூராட்சி மன்ற கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் தோற்கடிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் ஒன்று மீண்டும் 14நாட்களுக்குள் சமர்ப்பித்து அனுமதித்துக்கொள்ள வேண்டும்.
என்றாலும் புதன்கிழமை (31) தினத்துடன் இந்த வருடம் முடிவடைவதால், இந்த வருடத்தின் இறுதி தினமான 31ஆம் திகதி வரவு செலவு திட்டத்தை மீண்டும் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் சாத்தியப்படாத வருமான இலக்கு போன்ற காரணங்களை அடிப்படையாகக்கொண்டு, கூட்டு எதிர்க்கட்சிகள் வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களித்தன.
இந்நிலையில் மீண்டும் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும்போது, ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தையே மீண்டும் சமர்ப்பித்தால், அதற்கு எம்மால் ஆதரவளிக்க முடியாது எனவும்.
கொழும்பு மாக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய, நடைமுறைக்கு சாத்தியமான முறையில் மீண்டும் தயாரித்து சமர்ப்பித்தால், அது தொடர்பில் எமக்கு ஆராய்ந்து பார்க்க முடியும் எனவும் மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரிஸா சரூக் அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அதேநேரம் 31ஆம் திகதி புதன்கிழமை சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டம் காலை 10 மணிக்கு சமர்ப்பிக்கப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்படும் விவாதம் இடம்பெறாது.