இலங்கை கோள் மண்டலத்தை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்
இலங்கை கோள் மண்டலத்தின் புனரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பணிகளை மேற்கொள்ளுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை கோள் மண்டலம், 1965 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கைத்தொழில் கண்காட்சியின் பிரதான பகுதியாக கலாநிதி ஏ.என்.எஸ். குலசிங்க அவர்களால் திட்டமிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த கட்டிடத்தின் கட்டமைப்பு உக்கலடைதல் மற்றும் பௌதீக வசதிகள் மற்றும் தொழிநுட்ப உட்கட்டமைப்புக்கள் காலங்கடந்த நிலைமையை அவதானிக்கப்பட்டுள்ளமையால், விசேட கட்டிடக்கலை நுட்பங்களின் இயல்புகளை மாறாத வகையில் குறித்த புனரமைப்புப் பணிகளை செய்ய வேண்டுமென கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய தேசிய பெறுகை ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள உடன்பாட்டின் பிரகாரம், முன்னரே பொருத்தப்பட்ட கொன்கிறீட் தொழிநுட்பம் தொடர்பான விசேட அறிவு கொண்டுள்ள முன்னுரிமை அரச நிறுவனமான தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் (NERD) இற்கு குறித்த பணிகளை ஒப்படைப்பதற்காக விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.