ஜனாதிபதியுடனான பேச்சு: முன்வைக்கவுள்ள விடயங்கள் என்ன? மாவை தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான (Gotabaya Rajapaska) பேச்சுவார்த்தையின்போது முன்வைக்கப்போகும் விடயங்கள் குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் கூடி ஆராயவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நல்லெண்ண சமிக்ஞைகளின் பின்னரே சந்திப்பினை மேற்கொள்ள வேண்டும் என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம், கடிதம் மூலம் இ.ரா.சம்பந்தனுக்கு (R.Sampanthan) அறிவித்துள்ளது.
அத்துடன் குறித்த விடயம் குறித்து தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடனும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) மற்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.
இந்த நிலையில் கருத்து வெளியிட்டுள்ள மாவை சோனதிராஜா, ஜனாதிபதி கோட்டாபயவைச் சந்திப்பதற்கு முன்னதாக இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் சந்திக்கவுள்ளதாக கூறினார்.
இனப்பிரச்சினை குறித்து மௌனமாகவும் பயங்கரவாத தடைச் சடத்தை முழுமையாக நீக்கவும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் தயாராக இல்லாத ஜனாதிபதி, என்ன விடயங்கள் தொடர்பாக தம்முடன் பேசப்போகின்றார் என்ற கேள்வியெழுந்துள்ளதாக குறிப்பிட்டார்.
எவ்வாறிருந்தாலும் காணாமலாக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள், காணி அபகரிப்புக்கள் குறித்து எடுத்துரைத்து தீர்வுகளை வழங்குமாறு தாம் வலியுறுத்தவுள்ளதாகவும் அதற்கான நிகழ்ச்சி நிரலை குறித்த சந்திப்பின்போது தயாரிப்போம் என்றும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.