கோட்டாபய பதவியை ராஜினாமா செய்யாமல் சென்றதற்கான மர்ம பின்னணி!
நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏன் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தில் கையெழுத்திட்டும் அதை சபாநாயகருக்கு அனுப்பாமல் போனார், அல்லது உடனே ஏன் பதவியை ராஜினாமா செய்யாமல் போனார்? உண்மையில் அப்படியொரு கடிதம் உள்ளதா? அவர் மீண்டும் வரும் திட்டத்தோடுதானே பதவியை ராஜினாமா செய்யாமல் சென்றிருக்கிறார்?
உண்மையில் இந்த கேள்விகளுக்கு மிகப்பெரிய ரகசியம் நிறைந்த பதில்கள் எவையும் இல்லை. இதன் பின் மிகப்பெரிய ராஜதந்திரங்களும் இல்லை.
எதிர்ப்பினை அடுத்து நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தேவை பாதுகாப்பான பயணம் அந்தப்பயணத்தை வழங்கக்கூடிய ஒரே பாதுகாப்பு அவர் ஒரு நாட்டின் ஜனாதிபதி என்பதே.
ஜனாதிபதி என்ற பதவி இருந்தமையால்தான் அவர் விசேட இராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறினார். அதே பதவியை வைத்துத்தான் மாலைதீவில் அந்த நாட்டின் அரச பாதுகாப்போடு தங்கவைப்பட்டு சிங்கப்பூர் நோக்கி பயணிக்கிறார்.
அவர் கையில் இருப்பது இலங்கையின் சாதாரண கடவுச்சீட்டு இல்லை ராஜதந்திர கடவுச்சீட்டு அதனை கொண்டிருப்பவர்கள் சாதாரண குடிவரவு குடியகழ்வு நுழைவுகளின் ஊடாக பயணிக்க வேண்டியதில்லை, அத்துடன் தூதரக தொடர்புகளை கொண்டிருக்கும் நாடுகளுக்கு பயணிக்க வீசா உற்பட ஏனைய சலுகைகளும் பாதுகாப்பும் உடனடியாக கிடைக்கும்.
ஒரு நாட்டின் ஜனாதிபதியாக பாதுகாப்பாக பயணிப்பதா அல்லது முன்னாள் ஜனாதிபதி என்ற பெயரில் சாதாரண நடைமுறைகளின் ஊடாக பயணிப்பதா என்ற கேள்வி வரும் போது முதலாவது ஒப்சனை கோட்டாபய தேர்தெடுத்ததில் வியப்பேதும் இல்லை.
பதவியை உடனே ராஜினாமா செய்திருந்தால் விமானப்படையின் விமானத்தின் மூலம் வெளியேறியிருக்க முடியாது செல்லும் நாடுகளில் பாதுகாப்பு கிடைத்திருக்காது தூதரக உதவிகள் கிடைத்திருக்காது.
திட்டமிட்ட இடத்தை அடைந்தவுடன் கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் அந்த நிமிடத்தில் இருந்து அவர் முன்னாள் ஜனாதிபதி ஆகிவிடுவார்.
அனேகமாக இன்று நள்ளிரவோ அல்லது நாளையோ அக்கடிதம் சபாநாயகருக்கு கிடைக்கச்செய்யப்படும். அல்லது தற்போது சபாநாகரிடம் இருக்கும் அக்கடிதம் தனக்கு கிடைக்கப்பெற்றதாக சபாநாயகரால் அறிவிப்பு வெளியிடப்படும்.
என்னைப்பொருத்தவரை கோட்டாபயவை மட்டுமல்ல பசில் தொடக்கம் மொத்த ராஜபக்ஷ குடும்பமும் நாட்டை விட்டு வெளியேறிச்செல்ல முற்பட்டால் அவர்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கவேண்டும்.
இலங்கையின் சட்டத்தின் பிரகாரம் அவர்களை தண்டிக்க எந்த வாய்ப்பும் இல்லை அவர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் அவர்களின் குடியுரிமையை வரிதாக்கி அவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்கலாம். இது நாட்டுக்கு நல்லது. என குறித்த தகவலை முகநூலில் சுப்ரமணிய பிரபா என்பவர் பதிவிட்டுள்ளார்.
