கோட்டாபயவின் நிலையே ரணிலுக்கும் ஏற்படலாம்! டலஸ் அணி
"தவறான தீர்மானங்களை எடுத்ததால்தான் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) நாட்டை விட்டுத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இதுபோன்ற நிலை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) ஏற்படும் என்று தெரிகின்றது." என டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) தலைமையிலான சுதந்திர மக்கள் சபை உறுப்பினரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார (Wasantha Yapa Bandara) தெரிவித்தார்.
தெற்கு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியின் போது மேலும் கூறுகையில்,
"உள்ளூராட்சி சபைத் தேர்தலும் பொருளாதாரப் பிரச்சினையும் ஒரே பிரச்சினைதான். தேர்தல் என்பது எமது அடிப்படை உரிமை. இதை அரசால் எந்தக் கட்டத்திலும் மீற முடியாது.
பிழையான தீர்மானங்களை எடுத்ததால்தான் அந்தத் தலைவர் நாட்டை விட்டுத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதுபோன்ற நிலை தற்போதைய ஜனாதிபதிக்கும் ஏற்படும் என்று தெரிகின்றது.
சர்வேதச நாடுகள் எங்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்றால் அவர்கள் நம்பக்கூடிய ஆட்சியை எதிர்பார்ப்பார்கள்.
மக்களின் அடிப்படை உரிமையை மீறி இவ்வாறு தேர்தலை ஒத்திப்போட்டால் எப்படி அவர்கள் இந்த அரசை நம்புவார்கள்? எப்படி உதவி செய்வார்கள்?
இந்த அரசின் செயற்பாடுகளுக்கு மக்களிடம் வரவேற்பில்லை. அரசிடம் வாக்குப் பலம் இல்லை. அதனால்தான் அவர்கள் தேர்தலை ஒத்திப்போடுகின்றார்கள்.
சர்வதேச நாணய நிதியத்திடம் நாம் நிதி கேட்டுச் சென்றதன் பின்தான் பங்களாதேஷ் சென்றது. ஆனால், அவர்கள் முதலாவது தவணை நிதியைப் பெற்றுவிட்டார்கள். எமது விவகாரம் இன்னும் இழுபறியிலேயே உள்ளது.
இந்த அரசுமீது நாட்டு மக்களின் விசுவாசம் இன்மையே இதற்குகே காரணம். சர்வதேச உதவி கிடைக்க வேண்டும் என்றால் உள்நாட்டு மக்களும் சர்வதேசமும் நம்பக்கூடிய அரசு இருக்க வேண்டும். ஆனால், தேர்தலை ஒத்திப்போடப் போட அரசு மீதான சர்வதேசத்தினதும் மக்களினதும் நம்பிக்கை குறையும்.
தேர்தலை ஒத்திப்போட்டால் தேர்தலைக் கேட்டு மக்களால் ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது. தாக்குதல் நடத்தப்படுகின்றது.
அப்படியென்றால், மக்களின் உரிமையைப் பாதுகாக்க மக்கள் என்னதான் செய்வது" - என்றார்.