போராட்டத்தின் நோக்கம் கோட்டாபயவை ராஜினாமா செய்யவைப்பது! இதற்காக இல்லை
கோட்டா கோ கம போராட்டக்காரர்களின் போராட்டம் கோட்டாபய ராஜபக்ஷவின் ராஜினாமாவோடு வெற்றிபெற்றுவிட்டது.
போராட்டக்காரர்கள் கோட்டா கோ ஹோம் என்றே போராட்டத்தை ஆரம்பித்தார்கள் கோட்டாபய ராஜபக்ஷவின் ராஜினாமாவோடு அது முடிந்துவிட்டது.
போராட்டக்காரர்கள் பெயர் குறிப்பிட்டு ஒருவரை ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ நியமிக்க போராட்டம் செய்யவில்லை. அவர்களின் நோக்கம் கோட்டாபயவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே ஒழிய அவருக்கு பதிலாய் இன்னொருவரை பதவியில் அமர்த்துவது இல்லை.
போராட்டக்காரர்கள் கோட்டாபயவுக்கு எதிராக திடீரென ஒரு நாளில் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் இல்லை கோட்டாபயவின் செயற்பாடுகளை தொடர்ந்து கவனித்து அதன் பின்னரே அகற்ற போராட்டத்தில் இறங்கினார்கள்.
போராட்டக்காரர்கள் போராட்டத்தின் மூலம் ஏற்படுத்திய இடைவெளியை யாரைக்கொண்டு நிரப்புவது என்பதில் அரசியல் கட்சிகளுக்கு கருத்துவேறுபாடுகள் இருக்கலாம் அதற்காய் போராட்டக்காரர்களை அவர்களுக்கு எதிராகவெல்லாம் போராடத்தூண்டுவது ஏற்புடையதில்லை.
ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமர் பதில் ஜனாதிபதி ஆவார் என்பது அரசியலமைப்பை மேலோட்டமாக வாசித்த சிறுபிள்ளைக்கும் தெரிந்த விடயம் அது போராட்டக்காரர்களுக்கு தெரியாத விடயம் அல்ல.
உங்களுக்கு பதில் ஜனாதிபதியின் முகம் பிடிக்கவில்லையெனில் அதற்காய் அவரை மாற்ற முடியாது. அவரின் செயற்பாடு எப்படி என்பதை பொருத்தே அதுகுறித்து முடிவு செய்யவேண்டும்.
ரணில் கடந்த காலத்தில் அதிகாரங்கள் எதுவுமற்ற பெயரளவு பிரதமர். இப்போது அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி. அப்பதவியில் அவரின் செயற்பாடுகளை பார்க்காமல் ஒரே நாளில் அவரையும் வெளியேற கோருவது ஏற்புடையது அல்ல.
பதவியேற்ற ரணிலுக்கு கால அவகாசம் வழங்கப்படவேண்டும் அவர் கையில் மந்திரக்கோலோடு ஆட்சிக்கு வரவில்லை நொடியில் மாற்றங்களை ஏற்படுத்த குறைந்த பட்சம் ஓர் இரு மாதங்கள் அவரின் பணிக்கு இடையூறு விளைவிக்காமல் இருந்து கவனித்துவிட்டே அவரை அகற்றுவதா நீடிக்க விடுவதா என்ற முடிவுக்கு வரவேண்டும்.
இளைஞர்களை தடைக்கற்களை உடைக்கும் தடைகளாக பயன்படுத்தாமல் சுயாதீனமாக சிந்திக்க விடவேண்டும். இதுவே இன்றைய அரசியல்வாதிகள் செய்யவேண்டியது என சுப்ரமணிய பிரபா என்பவர் குறித்த கருத்துக்களை முகநூலில் பதிவிட்டுள்ளார்.