கனத்த இதயத்துடன் விடைபெறுகின்றேன் ; மிக்கி ஆர்தர் கவலை
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியை இராஜினாமாசெய்வதாக மிக்கி ஆர்தர் அறிவித்துள்ளார். நேற்று இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையிடம் மிக்கி ஆர்தர் தனது இராஜினாமா அறிவித்துள்ளார்.
மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பின்னர் டேர்பிசர் கவுன்டி கிரிக்கெட் கிளப்புடன் இணைந்துகொள்ளவுள்ளதாக மிக்கி ஆர்தர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நான் வந்துசேர்ந்தவேளை காணப்பட்டதை விட இலங்கை அணி தற்போது சிறப்பான நிலையில் உள்ளது நான்திறமையை வளர்ப்பதற்கும் இலங்கைக்கு எதிர்காலத்தில் வெற்றியளிக்க கூடிய அணியை உருவாக்குவதற்கும் உதவியுள்ளேன் என மிக்கி ஆர்தர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கனத்த இதயத்துடன் விடைபெறுகின்றேன் - இலங்கை அணியுடனான எனது எதிர்காலம் குறித்து கிரிக்கெட் அதிகாரிகளிடமிருந்து உறுதியான தெளிவான தகவல்கள் கிடைக்காதமையால் நான் இந்த முடிவை எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை எனது நடவடிக்கைகள் செயற்பாடுகள் குறித்து தனக்கு மகிழ்ச்சி என்பதை வெளிப்படுத்தியிருந்தால் நான் இலங்கைஅணியுடன் தொடர்ந்தும் இணைந்திருப்பேன் என தெரிவித்துள்ள அவர் , ஆனால் அவ்வாறான பதில் எதுவும் கிடைக்காததால் தன்னிடம் வேறு தெரிவு இருக்கவில்லை எனவும் கவலையுடன் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.