விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றிய தங்கம் ; உரிமையாளர்கள் தொடர்பில் அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களிடமிருந்து இராணுவம் தங்க நகைகளைக் கைப்பற்றவில்லை என்றும், விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு நேற்று நாடாளுமன்றத்தில் பதிலளிக்கையிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் களஞ்சியங்களில் இருந்து சுமார் 150 கிலோகிராம் தங்க நகைகள் மட்டுமே கைப்பற்றப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

குறித்த நகைகளின் உரிமையாளர்கள் தொடர்பான எந்தத் தகவலும் இராணுவத்திடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த தங்க நகைகள் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவு, தங்க ஆபரணங்கள் அதிகார சபை மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவை இணைந்து விசாரணை மற்றும் உறுதிப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், மூன்று மாதங்களுக்குள் தங்க நகைகள் நீதிமன்றத்திடம் கையளிக்கப்படும் என்றும், சட்டரீதியாக உரிமை கோருபவர்களுக்கு அவற்றைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், 2014ஆம் ஆண்டு தங்களது அடையாளங்கள் மற்றும் ஆவணங்களை முறையாக உறுதிப்படுத்திய 2,015 பேருக்கு தங்க நகைகள் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், தகுந்த ஆவணங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு தொடர்ந்தும் நகைகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலோ அல்லது தேர்தல் பிரசாரங்களிலோ எந்தவித வாக்குறுதியும் வழங்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெளிவுபடுத்தினார்.