தீர்த்தோற்சவத்தில் பறிபோன தங்க நகைகள்; இரு தினங்களில் 26 பவுண் களவு
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய இறுதி நாள் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்டு ஆலய தரிசனத்தில் ஈடுபட்ட வயது முதிர்ந்த 4 பெண்களின் 9 பவுண் தங்க சங்கிலிகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
திருட்டு சம்பவம் தொடர்பில் இன்று வியாழக்கிழமை (17) முறைப்பாடு கிடைத்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இரு தினங்களில் 26 பவுண் தங்க சங்கிலிகள் களவு
நேற்று தரிசனத்துக்காக ஆலயத்துக்கு சென்று, அங்கு அன்னதானத்தில் கலந்துகொண்டபோதும் கஞ்சி வாங்கிக்கொண்டிருந்தபோதும் 4 வயோதிப பெண்களின் நகைகள் களவாடப்பட்டுள்ளன.
கழுத்தில் அணிந்திருந்த 3 பவுண், 2 பவுண், 2 பவுண், 2 பவுண் என மொத்தமாக 9 பவுண் தங்க சங்கிலிகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருடர்கள் திட்டமிட்டு நகையை அறுத்தெடுத்துச் சென்றதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, ஆலய தேர் மற்றும் தீர்த்தோற்சவம் ஆகிய இரு தினங்களில் 26 பவுண் தங்க சங்கிலிகள் காணாமல் போயுள்ளது.
அத்துடன், இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் புத்தளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை , மரியாள் தேவாலய திருவிழாவில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்தெடுத்த சம்பவம் தொடர்பில் கொழும்பைச் சேர்ந்த ஒரு பெண் கொள்ளை குழுவைச் சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.