சொகுசு காரில் ஆடுகள் கடத்தல்; வசமாக சிக்கிய நபர்கள்
சொகுசு காரில் ஆடுகளை கடத்திய இருவர் உட்பட மூன்று சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை சம்மாந்துறை புறநகர் பகுதிகளில் உள்ள ஆடுகள் சொகுசு காரில் ஏற்றி செல்லப்பட்டு கடத்தப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றிருந்தது.

பொதுமக்களிடம் இருந்து தகவல்
கடந்த சனிக்கிழமை (17) மாலை சந்தேகத்திற்கிடமாக சொகுசு கார் ஒன்று நடமாடுவதாக பொதுமக்களிடம் இருந்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
அந்த தகவலுக்கமை பொலிஸ் குழுவினரால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்லப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யபட்டனர்.
பாலமுனை பகுதியை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் கடந்த சில நாட்களாக அக்கரைப்பற்று பகுதியில் இருந்து வாடகை அடிப்படையில் சொகுசு கார் ஒன்றினை பெற்று ஒலுவில் பாலமுனை சம்மாந்துறை போன்ற பகுதிகளில் வீடுகள் மற்றும் வீதியோரங்களில் மேய்கின்ற ஆடுகளை சூட்சுமமாக களவாடி வந்துள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸார் காரினை பின்தொடர்ந்து கைப்பற்றியதுடன் காரில் இருந்து 4 ஆடுகளையும் மீட்டதுடன் அதில் பயணம் செய்த இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
கைதான இரு சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் களவாடப்படும் ஆடுகளை கொள்வனவு செய்யும் சந்தேக நபர் என கூறப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய நான்காவது சந்தேக நபரை பொலிஸார் தேடி வரும் நிலையில் அவர் தற்போது தலைமைறைவாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
கைதான சந்தேக நபர்களில் 28 வயதுடைய சந்தேக நபர்கள் பாலமுனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் 38 வயதுடைய சந்தேக நபர் மருதமுனை பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் மீட்கப்பட்ட ஆடுகள் சொகுசு கார் மற்றும் 3 சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பதில் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (18) முன்னிலைப்படுத்திய போது சந்தேக நபர்களை எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிடட்டார்.