ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கவேண்டும்... மோடியின் மதவாதக் குழு கோரிக்கை!
மோடியுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கும் RSS அமைப்பின் இலங்கை கிளையின் ஒரு பிரிவாக இலங்கை இந்து சம்மேளனம் என்ற பெயரில் இயங்கி வரும் அமைப்பு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவேண்டும் என்று கோரி வருகிறது.
இனவாதியான தேரர் பொதுபலசேனா என்ற அமைப்பின் செயலாளராக கடந்த காலத்தில் ஏனைய மதங்களை குறிப்பாக இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டும் பொலிஸ் அதிகாரியை தாக்கியும் நீதிமன்றத்தை அவமதித்தும், இனக்கலவரங்களை தூண்டி இஸ்லாமியர்களின் உடைமைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உயிர்களுக்கு சேதம் ஏற்படுத்துவது மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் உட்பட பலவித அதர்ம செயல்களில் ஈடுபட்டுள்ளதுடன் அடாவடி குற்றங்களையும் புரிந்து வந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக கருத்து தெரிவித்த நிலையில் 2010 இல் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மறைவுக்கு நீதி கேட்டு போராடிய அவருடைய மனைவி சந்தியாவை அச்சுறுத்திய தேரர் யுடியூப் தளம் மூலம் தொடர்ச்சியாக பௌத்த சிங்கள இனவாத மதவாத கருத்துக்களை பரப்பி வந்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் 2019 பதவிக்கு வந்த சக இனவாதியான கோத்தபாயவினால் ஜனாதிபதி மன்னிப்பு என்ற பெயரில் விடுவிக்கப்பட்டதோடு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றின் தலைவராகவும் நியமிக்கப்பட்டு இனவெறி கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இலங்கையில் ஆயுதப்படையினர் மற்றும் இனவெறிக் கும்பல்களினால் அழிக்கப்பட்ட பல சைவ மற்றும் இந்துக் கோவில்களுக்கு எந்தவித ஆதரவையும் வழங்காத மோடியின் மதவாதக் குழு இலங்கையில் உட்புகுந்து ஞானசார தேரரின் விடுதலையை கோரி நிற்பது தொடர்பில் ஈழத்தமிழர்களும் சைவர்களும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
இதேவேளை ஈழத்தமிழர் விடுதலை போராட்டத்தில் இருந்து பல்டி அடித்து தேரர்களுடன் ஒப்பந்தங்களை செய்துள்ள உலக தமிழர் பேரவை மற்றும் கனடிய தமிழர் காங்கிரஸ் ஆகியவற்றின் தற்போதைய கூட்டாளிகள் ஆகியுள்ள மகாநாயக்கர்களும் தேரர்களும் கூட தேர்தலுக்கு முன்னர் ஞானசார தேரரின் விடுதலையை கோரி நிற்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலத்தில் செய்த எந்த ஒரு கொடுஞ் செயலுக்கும் தவறுகளுக்கும் வருந்தாத மன்னிப்பு கோராத இவரை விடுதலை செய்வது பொருத்தமானதா? என முகநூலில் Dr முரளி வல்லிபுரநாதன் என்பவர் குறித்த தகவலை வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.