அரசனாக்கக்கூடிய அளவிற்கு மேன்மையைத் தரும் விபரீத ராஜ யோகம்!
விபரீத ராஜ யோகம் கொண்ட ஒருவர் தான் எந்த அளவுக்கு ஏழ்மையான நிலையில் இருந்தாலும் அவருக்கு நல்ல தசாபுத்தி சேர்ந்து வரும் போது அவருக்கு திடீரென அந்த விபரீத ராஜ யோகம் ஒரு பெரிய அரசனாக்கக்கூடிய அளவிற்கு மேன்மையைத் தரும்.
யோகம் என்பது சமஸ்கிருத வார்த்தை இதற்கு கிரகங்களின் சேர்க்கை அல்லது இணைவு என்று அர்த்தம். பெரும்பாலானோர் இது ஒரு அதிர்ஷ்டம் என தவறாக புரிந்து கொள்கின்றனர்.
யோகம் என்பது கிரகங்களின் ஒரு குறிப்பிட்ட இணைவை மட்டுமே குறிப்பதாகும். கிரக இணைவால் மட்டும் ஒருவருக்கு அதிர்ஷ்டம் கிடைத்துவிடாது. ஒரு தனி கிரகத்தால் ஒருவருக்கு பெரியளவில் நன்மையோ அல்லது தீமையோ தந்துவிடுவதில்லை.
ஒரு முக்கிய சம்பவம் அல்லது செயல் சில கிரகங்களின் கூட்டு சேர்வதால் ஏற்படுகிறது எனலாம்.
சுபத்துவம், அசுபத்துவம்
வானில் கிரகங்கள் ஒரு நல்ல சுபத்துவ நிலையில் இணைந்திருக்கும் போது அதனால் பூமியில் ஒருவருக்கு எல்லாவிதமான சுகங்கள், சுப விஷயங்களை அனுபவிக்க முடிகிறது.
அதுவே அசுப நிலையில் (பாவத்துவம்) இருக்கும் போது அவருக்கு சில சங்கடங்கள் ஏற்படுகின்றன.
ராஜயோகம், விபரீத ராஜயோகம் வேறுபாடு என்ன?
ராஜ யோகம் என்றால் என்ன?
ஜோதிடத்தில் ராஜ யோக அமைப்பு என சில நேரங்களில் மட்டுமே அடைமொழி கொடுத்து குறிப்பிடப்படுவது உண்டு.
ராஜ யோக அமைப்பானது ஒருவருக்கு அரசாளக்கூடிய அமைப்பைத் தரக்கூடியது. அவர் செயல் சூழல் அனைத்தும் அதற்காக விதிக்கப்பட்டது போல இருக்கும்.
விபரீத ராஜயோகம் என்றால் என்ன?
''ராஜயோகம் என்பது ஒருவருக்கு ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருக்கும் போது ஏற்படுவதாகும். அதுவே விபரீத ராஜ யோகம் என்பது எதிர்பாராமல் நடப்பது. விபரீதம் என்றால் முற்றிலும் எதிர்பாராத நிலை எனலாம்.
இந்த விபரீத ராஜயோகம் என்பது முற்றிலும் எதிர்பாராத சூழ்நிலையில் ஒருவரை அரசனாக்கும் அளவிற்கு உயர்த்தக்கூடியது எனலாம்.
அதாவது பெரியளவில் எந்த எதிர்பார்ப்பு இல்லாத நிலையில் சுலபமாக அல்லது குறுக்கு வழியில் ஒருவருக்கு கிடைக்கக்கூடிய அந்தஸ்து அல்லது அரச பதவியை விபரீத ராஜயோகம் என குறிப்பிடப்படுகிறது.
விபரீத ராஜயோகம் கிரக அமைப்பு
ஜோதிடத்தில் 6, 8, 12 ஆகிய பாவங்கள் மறைவு ஸ்தானமாகவும், சாதகமற்ற ஸ்தானங்களாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த பாதக வீடுகளின் அதிபதிகள் தங்களுக்குள் ஒன்றிணைவது அல்லது மேற்சொன்ன 6, 8, 12 ஆகிய வீடுகளுக்குள்ளேயே பரிவர்த்தனை அமைப்பு (மாறி மாறி அமர்வது) விபரீத ராஜ யோக அமைப்பாகும்.
இத்தகைய அமைப்பு கொண்டவர் ஒரு பெரிய அரசாளும் பொறுப்பு கிடைத்தே தீரும்.
இருப்பினும் அந்த கிரகங்களுடன் ராகு கேது, சனி போன்ற அசுப கிரகங்கள் இணைவது யோகத்தைப் பங்கம் செய்யும் அமைப்பாகும்.
ஜோதிடத்தில் குறிப்பிடப்படக்கூடிய யோகங்கள் அனைத்தும் கிரகங்கள் பங்கமற்ற நிலையில் அமர்ந்திருக்கும் போது மட்டுமே அதற்கான சரியான பலனைத் தரும்.
குறிப்பாக ஜாதகரின் லக்னாதிபதி வலுவாக இருக்கும் நிலையில் நிச்சயம் யோக பலன் கிடைத்தே தீரும்.