புதிய நியமனங்களுக்கு வழிவிட்டு விலகுங்கள்!
ஜனாதிபதியொருவர் பதவி விலகும் போது அவரால் நியமிக்கப்பட்ட ஆளுனர்களும் பதவி விலகுவது சம்பிரதாயமாகும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் , முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனருமான ஷான் விஜேலால் டி சில்வா தெரிவித்தார்.
ஆனால் தற்போதுள்ள ஆளுனர்கள் தமது பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு அரசியல்வாதிகளிடமும் சென்று புகாரளித்துக் கொண்டிருப்பதாகவும், இவற்றை தவிர்த்து புதிய நியமனங்களுக்கு இடமளிப்பதே ஒழுக்கமான செயலாகும் என்றும் அவர் கூறினார்.

ஆளுநர்கள் விலகாதிருப்பது ஒழுக்கமான விடயமன்று
கொழும்பிலுள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி காலத்தில் கிழக்கு ஆளுனராக செயற்பட்டிருக்கின்றேன். எனினும் கடந்த 2020 ஆட்சி மாற்றத்தின் பின்னர் , புதிய ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்துக்கமைய அவர் விரும்பும் ஆளுனர்களின் நியமனத்துக்கு இடமளிக்கும் வகையில் நான் எனது பதவியை இராஜிநாமா செய்வதாக உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் அறிவித்தேன்.

மாகாணசபைகள் , பிரதேசசபைகள் உள்ளிட்டவற்றுக்கென பதவி காலம் காணப்படுவதைப் போன்று ஆளுனர்களுக்கும் நியமனம் பெற்றதிலிருந்து 5 ஆண்டுகள் பதவி காலம் காணப்படுகின்றன.
எனினும் ஜனாதிபதியின் பிரதிநிதிகளான அவர்கள் , புதிய ஜனாதிபதியொருவர் தெரிவு செய்யப்படும் போது தாமாக பதவி விலகுவது ஒரு சம்பிரதாயமாகும். அதன் அடிப்படையிலேயே தற்போதுள்ள ஆளுனர்கள் சிலருக்கு பதவி விலகுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டிருக்கக் கூடும்.
அவர்களில் சிலர் தமது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் , சிலர் வேறு அரசியல் தலைவர்களிடம் சென்று புகாரளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உண்மையில் இது ஒழுக்கமான விடயமன்று. ஜனாதிபதிக்கு அவர் விரும்புபவர்களை பிரதிநிதிகளை ஆளுனர்களாக நியமிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் ஒவ்வொருவரும் பதவி விலகுவதே ஒழுக்கமாகும் எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.