ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த பெண் குழந்தை... 18 மணித்தியாலங்களுக்கு பின் மீட்பு!
இந்தியாவில் குழந்தை ஒன்று ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 18 மணித்தியாலங்களுக்கு பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் இந்தியா - ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
ராஜஸ்தானில் இரண்டரை வயது நீரு குர்ஜர் என்ற பெண் குழந்தை மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்தது.
இதன்போது சுமார் 35 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மீட்பு படையினரால் மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், 18 மணித்தியால போராட்டத்துக்குப் பின்னர் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர்.
குழந்தையின் உடல்நிலை மோசமாகி உள்ளதால் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.