முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி ; நீதிமன்றின் உத்தரவு!
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வீட்டில் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணையை மே 5 ஆம் திகதி மீண்டும் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவினை கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷவிதான நேற்று(17)பிறப்பித்துள்ளார். சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, உயிரிழந்த சிறுமியின் சகோதரர், இரண்டாவது சாட்சி, நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளனர்.

சாட்சி விசாரணை மே 5 ஆம் திகதிக்கு
இதன்போது, சம்பவம் தொடர்பான மேலதிக சாட்சி விசாரணை மே 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சம்பவத்தில் நான்காவது சந்தேகநபரான ரிஷாத் பதியுதீன் மற்றும் ஐந்தாவது சந்தேகநபரான பதியுதீன் அப்துல் ரிஷாத் ஆகிய இரு சந்தேகநபர்களுக்கும் எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 வயதான ஜூட் குமார் ஹிசாலினி என்ற சிறுமி கடந்த 2021 ஆம் ஆண்டு தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 12 நாட்களின் பின்னர் உயிரிழந்திருந்தார்.
சிறுமியின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து, 2021 ஜூலை மாதம் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த மரணத்திற்கு நீதி கோரி பரவலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற நிலையில் , சிறுமி தற்கொலை செய்துகொண்டமைக்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்திருந்திருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் சுமார் 40 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. அத்துடன், ரிஷாட் பதியூதீனின் வீட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மற்றுமொரு பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரனும் அன்றைய தினமே கைது செய்யப்பட்டிருந்தார்.
சம்பவத்தை அடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்ற தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.