சாணம் பூசி அரை நிர்வாணமாக ஊர்வலம் ; கணவனுடன் தகாத உறவிலிருந்த பெண்ணுக்கு மனைவி செய்த செயல்
திருமணமான ஆணுடன் சென்றதாகக் கூறி, 35 வயது விதவைப் பெண் ஒருவரை ஒரு கும்பல் அரை நிர்வாணப்படுத்தி, ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம், சத்தீஸ்கர் மாநிலம் பென்ட்ரா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. முன்பு தனது கணவரை இழந்த பெண் ஒருவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான ஆண் ஒருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

சரமாரியாகத் தாக்குதல்
இதன் காரணமாக, இருவரும் கிராமத்தை விட்டு வெளியேறி, மத்தியப் பிரதேசத்தில் வசித்து வந்தனர். சில தினங்களுக்கு முன் இருவரும் மீண்டும் கிராமத்திற்குத் திரும்பினர்.
இது தொடர்பாகக் பொலிஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்தபோது, அந்தப் பெண் காதலனுடன் வாழ விரும்புவதாகத் தெரிவித்தார். இரவு இருவரும் கிராமத்தில் உள்ள ஒருவரது வீட்டில் தங்கியிருந்தனர்.
இதன்போது குறித்த ஆணின் மனைவி மற்றும் சகோதரர் உள்ளிட்ட கும்பல் அங்கு புகுந்தது. அவர்கள் அந்தப் பெண்ணை சரமாரியாகத் தாக்கி, அவரது ஆடைகளைக் களைந்து அரை நிர்வாணப்படுத்தி அவர் உடல் முழுவதும் சாணத்தைப் பூசி, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகக் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.
இந்தக் கொடூரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்களும் பெண்ணின் உறவினர்களும், அந்த கும்பலிடம் இருந்து பெண்ணை மீட்டனர். அவருக்குப் புதிய ஆடைகளை வழங்கியதோடு, உடனடியாகப் பொலிசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், காயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பெண்ணைத் தாக்கி அவமானப்படுத்திய மனைவி உட்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.