இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி; சிறினேசன் கருத்து
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு ஒரு இணக்கமான முறையில் சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவரப்படுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்காகப் போட்டியிட்டவரும், அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு-செட்டிபாளையத்தில் நேற்று(12.02.2024) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, குறித்த விடயம் தொடர்பில், தமது ஆதரவாளர்கள் பலருடன் பேசிய பின்னர் கருத்துக்களை வெளியிடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செயலாளர் பதவி ஞானமுத்து சிறிநேசன் தொடர்ந்தும் கூறுகையில், “எமது கட்சிக்குள் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் சிறிநேசன் மற்றும் குகதாசன் ஆகியோருக்கு அப்பால் கட்சிக்காக நாங்கள் சிலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டும்.
நாங்கள் வேறு கட்சிக்குள்ளிருந்து மாறி மாறி இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் வரவில்லை நாம் எமது பரம்பரையிலிருந்து பின்பற்றி வருகின்ற இக்கட்சிதான் இது.
எமக்கு இது தொடர்பில் முதிர்ச்சியும், ஒரு நீண்டகாலப் பயணமும் இருக்கின்றது. இதனால் நாங்கள் கட்சியில் பதவிகளைக் கேட்பதில் எந்தவித தவறுமில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களே! நீங்கள் எங்களது கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றீர்கள் உங்களிடம் ஊடகவியலாளர்கள் பல கேள்விகளைக் கேட்பார்கள் அப்போது நீங்கள் உண்மையான சரியான பதில்களை சொல்கின்ற போது நானும் இவ்வாறு அடிக்கடி ஊடக சந்திப்புக்களைச் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படாது.
சிலருக்கு ஊடகங்களைப் பார்க்கின்ற போது பல விடையங்களைப் பேச வேண்டும் என்ற எண்ணம் வருவதுண்டு, என்னைப் பொறுத்தவரையில் எந்த விடயங்களைப் பேசவேண்டும் என்ற கட்டுப்பாட்டோடுதான் ஊடகங்களுக்கு முன்னால் பேசுகின்றேன்.
எனவே கட்சி என்ற விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களும், நாங்களும் ஒன்றாகப் பயணிக்க வேண்டியவர்கள்.
எனவே நாம் கவனமாக ஊடகங்களுக்கு முன்னால் பேசும் நாகரீகத்தை பேணவேண்டும். செயலாளர் தெரிவிற்காக மீண்டும் மீண்டும் பொதுச் சபையைக் கூட்டி வாக்காளர்களுக்கு சலிப்புத் தன்மையை ஏற்படுத்துவதா? என்ற கேள்வி எழுகின்றது.
எனவே பொதுச் செயலாளர் பதவிக் காலத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆதரவாளர்களிடத்தில் இருக்கின்ற காரணத்தினால் நாம் ஒற்றுமையாக முடிவெடுத்து சரியான இணக்கப்பாட்டிற்கு வருவோம், விரைவில் அதனை மக்கள் அறிவார்கள்” என்றார்.