இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் மீண்டும் தவிக்கும் காசா ; பெருமளவானோர் உயிரிழப்பு
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர வான்வழி தாக்குதல்களில் இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 400 இற்கும் அதிகமான் பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்று வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி முதல் போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில், போர் நிறுத்தத்தை மீறும் வகையில் இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து காசாவில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.
காசாவில் அமைதியற்ற சூழல்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான இஸ்ரேலிய கோரிக்கைகளை ஹமாஸ் மறுத்ததை அடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா பகுதிகளில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கை முடிவற்றது என்றும், விரிவடையும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கிழக்கு காசா, வடக்கில் உள்ள பெய்ட் ஹனவுன் நகரம் மற்றும் தெற்கில் உள்ள இதர சமூகங்கள் என அனைவரையும் அந்தந்த பகுதிகளில் இருந்து வெளியேற இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்கும் என்று தெரிகிறது. "இஸ்ரேல் இனிமேல், அதிகரித்த இராணுவ வலிமையுடன் ஹமாஸுக்கு எதிராக செயல்படும்" என்று பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.