எரிவாயு தட்டுப்பாடு ; லாஃப்ஸ் நிறுவனம் விசேட அறிவிப்பு
சந்தையில் லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன்களுக்கு ஏற்பட்டுள்ள தற்காலிக தட்டுப்பாடு குறித்து லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள 30,000 மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்ட எரிவாயு இறக்குமதி முனையத்தைப் பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள ஒரு செயல்பாட்டுக் கட்டுப்பாடு காரணமாகவே இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் அச்சமும் கொள்ளத் தேவையில்லை
இது நிறுவனத்தின் வழக்கமான இறக்குமதி நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த முனையத்தை விரைவில் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதற்காக அரசாங்க அதிகாரிகளுடன் நிறுவனம் தீவிரமாக ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றது.
இடைக்கால நடவடிக்கையாக, உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக சர்வதேச விநியோகஸ்தர்களிடமிருந்து வரும் எரிவாயு கப்பல்களை நேரடியாக கொழும்பு துறைமுகத்திற்கு திசைதிருப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதோடு எரிவாயு கையிருப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சந்தைக்குத் தடையின்றி எரிவாயுவை விநியோகிப்பதற்கான பொறிமுறைகள் சரிசெய்யப்பட்டுள்ளன.
எனவே பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும், தொடர்ச்சியான எரிவாயு விநியோகத்தைப் பேணுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் லாஃப்ஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது.