எரிவாயு வெடிப்பு; மற்றுமொரு பெண் உயிரிழப்பு
வீட்டு சமையல் எரிவாயு அடுப்பு வெடித்ததில் காயமடைந்து, கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண், uயிரிழந்துள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான, யு.கே.பிரியாங்கணி அசோகா (51) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வில்கமுவ, வெல்லசந்தியை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த பெண், கண்டியிலுள்ள பாடசாலையில் அவருடைய பிள்ளைகள் கல்விக்கற்று வருவதால், பல்லேகலையில் வாடகை வீடொன்றில் வசித்து வருகின்றார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த முதலாம் திகதியன்று அதிகாலை 3 மணியளவில், சமைப்பதற்கு தயாரான போதே, வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டதில், அப்பெண் எரிகாயங்களுக்கு உள்ளானார்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த பெண் 10 நாள்கள் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே 10ஆம் திகதியன்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.