முக்கிய அரசியல்வாதிகளின் வீடுகளில் பதுக்கப்பட்ட எரிவாயு கொள்கலன்கள்:கைப்பற்றி மக்களுக்கு பகிர்ந்த போராட்டகாரர்கள்
காலிமுகத் திடலில் அமைதியான போராட்டம் நடத்தி வந்த போராட்டகார்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் கடந்த 9 ஆம் திகதி தாக்குதல் நடத்தியதை அடுத்து ஏற்பட்ட பதற்றமான நிலைமையின் பின்னர் ஆளும் கட்சியின் முன்னாள் அமைச்சர்களின் சொத்துக்களுக்கு தீ வைத்தமை தொடர்பாக இன்று அதிகாலை 40 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதனிடையே முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சில பொருட்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகியுளள்ளன. முன்னாள் ஆளுநர் மஹிபால ஹேரத்திற்கு சொந்தமான விவசாய பண்ணையின் களஞ்சியத்தில் இருந்து 400 யூரிய இரசாயன பசளை மூட்டைகள் உட்பட பெருந்தொகையான இரசாயன பசளைகளை போராட்டகார்கள் நேற்று கைப்பற்றி இருந்தனர்.
கைப்பற்றிய இரசயான பசளைகளை போராட்டகாரர்கள் விவசாயிகளுக்கு பகிர்ந்தளித்துள்ளனர். அதேவேளை குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டில் இருந்து 80 சமையல் எரிவாயு கொள்கலன்களை போராட்டகார்கள் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் குருணாகல் மாநகர முதல்வர் துஷார சஞ்ஜீவவின் வீட்டில் இருந்து 60 சமையல் எரிவாயு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 12.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு கொள்கலன்கள் என போராட்டகார்கள் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றிய சமையல் எரிவாயு கொள்கலன்கள் இவர்களின் வீடுகளுக்கு அருகில் வந்திருந்த மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் கட்சி அலுவலகம்,வீடு, அவருக்கு சொந்தமான மதுபான விற்பனை நிலையங்கள் என்பவற்றையும் போராட்டகார்கள் தாக்கி சேதப்படுத்தினர்.
அத்துடன் குருணாகல் மாநகர முதல்வர் துஷார சஞ்ஜீவின் வீட்டையும் போராட்டகார்கள் தீயிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை அடித்து அடக்க வேண்டும் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் துஷார சஞ்ஜீவ ஆகியோர் பகிரங்கமாக கருத்து வெளியிட்டிருந்தனர்.