கண்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு...பெண் ஒருவர் பலி
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிதுருவெல்ல சந்தியில் வில்கமுவ பிரதேசத்தில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது பிள்ளைகள் கண்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்று வருவதாகவும், அதன் காரணமாக பல்லேகல பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் முதலாம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் தனது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து வருவதற்கு தயாராகிக்கொண்டிருந்த குறித்த பெண் வெடிப்பு மற்றும் தீவிபத்தில் பலத்த தீக்காயங்களுடன் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
10 நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 10ம் திகதி உயிரிழந்தார்.
மேலதிக விசாரணைகளை பல்லேகல பொலிஸ் பரிசோதகர் கிரிஷாந்த மேற்கொண்டு வருகிறார்.