திடீர் சோதனையில் சுற்றிவளைக்கப்பட்ட பல ஏக்கர் கஞ்சா தோட்டங்கள்
ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவின் இலுக்தென்ன பகுதியில் நடத்திய இரண்டு நாள் சோதனை நடவடிக்கையின்போது ஆயிரக்கணக்கான கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட கஞ்சா தோட்டங்கள் முற்றுகையிடப்பட்டு, பின் அவை தீயிட்டு அழிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் பண்டாரவளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு மற்றும் தியத்தலாவை இராணுவ முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழு இரண்டு நாட்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு கஞ்சா தோட்டங்களை முற்றுகையிட்டு, பின் அவற்றை தீயிட்டு அழித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கஞ்சா மாதிரிகள்
இந்த நடவடிக்கையின்போது கஞ்சா தோட்டங்களில் இருந்து கஞ்சா மாதிரிகளை ஆதாரமாக எடுத்துக்கொண்டு, பின்னர், அந்த கஞ்சா தோட்டங்கள் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சோதனை நடவடிக்கை வேளையில் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகிறது.
சோதனையிடப்பட்ட கஞ்சா தோட்டங்கள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:
சுமார் 2 ½ ஏக்கர் பரப்பளவில் 36,240 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட தோட்டம், சுமார் 2 ½ ஏக்கர் பரப்பளவில் 32,850 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட தோட்டம்,
சுமார் 01 ஏக்கர் பரப்பளவில் 22,140 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட தோட்டம், சுமார் 01 ஏக்கர் பரப்பளவில் 12,770 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட தோட்டம், சுமார் ¼ ஏக்கர் பரப்பளவில் சுமார் 8,520 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட ஒரு கஞ்சா தோட்டம்
115 கிலோ உலர்ந்த கஞ்சாச் செடிகள் கொண்ட ஒரு கஞ்சா தோட்டம் ஆகிய தோட்டங்கள் சுற்றிவளைக்கப்பட்டு பின், அவை தீ வைத்து அழிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.