கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு ; CID சாட்சியங்களில் மாற்றம்? விரிவான அறிக்கை கோரிய நீதிமன்றம்
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, குற்றப் புலனாய்வுத் துறையினால் (CID) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த எழுத்துப்பூர்வ சாட்சியங்களில் மாற்றம் செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்ட விடயம் தொடர்பில் விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு நேற்று (02) உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி தமரா குமாரி அபேயரத்ன, மகேஷ் ஒபேசேகர மற்றும் லக்ஸித சிறி துலாஜ் ஆகியோரின் வழக்கு விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர்கள் தொடர்பாக, முன்னதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், போலி அடையாள அட்டைகள், வங்கிக் கணக்குகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களும் முன்னைய அறிக்கைகளில் இடம்பெற்றிருந்ததாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
எனினும், குறித்த சந்தேகநபர்கள் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படாது என CID நீதிமன்றத்தில் அறிவித்துள்ள நிலையில், முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் தற்போதைய நிலைப்பாடு ஆகியவற்றுக்கு இடையிலான முரண்பாடுகள் குறித்து நீதவான் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குற்றச்செயல் வருமானச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என CID தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதனை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் நீதவான் வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, குறித்த வழக்கு தொடர்பான ஆதாரச் சுருக்க அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மூன்று சந்தேகநபர்களும் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.