அருட்தந்தை சிறில் காமினியின் கருத்துக்கு உதய கம்மன்பில பதிலடி
உளவுத்துறை செயல்பாடுகள் தொடர்பில் முறையான புரிதல் இன்றி அருட்தந்தை சிறில் காமினி கருத்துக்களை வெளியிட்டு வருவதாக பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அரசியல் தேவைகளுக்காக பலர் உளவுத்துறை குறித்து கருத்து வெளியிட்டாலும், அதன் நடைமுறைகள் மற்றும் செயற்பாடுகள் முற்றிலும் வேறுபட்டவை எனத் தெரிவித்தார்.
அருட்தந்தை சிறில் காமினி அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், உளவுத்துறை அதிகாரிகள் ஓய்வு பெறும்போது தங்களிடம் உள்ள தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியிருந்ததாக சுட்டிக்காட்டிய கம்மன்பில, அந்தக் கருத்து உளவுத்துறையின் அடிப்படை செயற்பாட்டு கோட்பாடுகளுக்கு முரணானது என தெரிவித்தார்.

உலகளாவிய நடைமுறைகளின்படி, உளவுத்துறை அமைப்புகள் மனித மூலங்களின் ஊடாக தகவல்களைப் பெறுகின்றன என்றும், அவ்வாறான தகவல் வழங்குநர்கள் பெரும்பாலும் தாங்கள் நம்பிக்கை வைக்கும் குறிப்பிட்ட அதிகாரிகளுடன் மட்டுமே தொடர்பில் இருப்பார்கள் என்றும் அவர் விளக்கமளித்தார்.
ஒரு உளவுத்துறை அதிகாரி ஓய்வு பெறும்போதோ அல்லது இடமாற்றம் பெறும்போதோ, அந்த தகவல் வழங்குநர்கள் வேறு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற மறுக்கக்கூடிய சூழ்நிலைகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தகவல் வழங்குநர்களின் அடையாளங்களை பாதுகாப்பது உளவுத்துறை நடவடிக்கைகளின் முக்கிய அம்சமாகும் என்பதால், அவற்றை பொதுவான தரவு அமைப்புகளிலோ அல்லது பல்வேறு நிர்வாக மட்டங்களிலோ பதிவு செய்வது பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என அவர் தெரிவித்தார்.
முன்னாள் உளவுத்துறை தலைவர் சுரேஷ் சலே பல ஆண்டுகளாக உருவாக்கிய தகவல் வலையமைப்புகள் தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டதுடன், சில தகவல் வழங்குநர்கள் குறிப்பிட்ட அதிகாரிகளிடம் மட்டுமே நம்பிக்கை வைப்பார்கள் எனக் கூறினார்.
உளவுத்துறை நடவடிக்கைகள் குறித்த புரிதல் இன்றி பொதுவெளியில் கருத்துக்கள் வெளியிடப்படுவது தவறான புரிதல்களை உருவாக்கும் எனவும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.