எரிபொருள் விலை மோசடி ; அரசாங்கம் மீது சம்பிக்க கடும் குற்றச்சாட்டு
பழைய விலையிலேயே எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதால் தற்போதைக்கு விலையைக் குறைக்க முடியாது என அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்திருப்பது மக்களை அப்பட்டமாக ஏமாற்றும் செயல் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பெப்ரவரி மாதத்தில் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருட்களை அடிப்படையாகக் கொண்டு, மார்ச் மாத ஆரம்பத்தில் உலக சந்தையில் விலை உயர்ந்ததை காரணம் காட்டி அரசாங்கம் உடனடியாக உள்நாட்டு எரிபொருள் விலையை அதிகரித்ததாக அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் அரசாங்கம் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
போர் நிறுத்தத்திற்குப் பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் உலக சந்தையில் எரிபொருள் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய நிலவரப்படி ஒரு லீட்டர் பெட்ரோலை சுமார் 225 ரூபாய்க்கும், ஒரு லீட்டர் டீசலை 240 ரூபாய்க்கும் இலங்கைக்கு இறக்குமதி செய்ய முடியும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், எரிபொருள் இறக்குமதியில் அரசாங்கம் பெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய சம்பிக்க ரணவக்க, சில நிறுவனங்களிடமிருந்து அதிக விலைக்கு எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டதன் நிதிச் சுமை பொதுமக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாட்டின் டொலர் இருப்பு நிலைமை பாதிக்கப்பட்டதற்கு உலக சந்தை எரிபொருள் விலை உயர்வே காரணமல்ல என்றும், மின் உற்பத்தித் துறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் எரிபொருள் விரயமே அதற்குக் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
எரிபொருள் விலை நிர்ணயம் மற்றும் இறக்குமதி நடவடிக்கைகள் தொடர்பில் வெளிப்படையான விளக்கத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.