பல இளம்பெண்களின் வீடியோவுடன் சிக்கிய போலி தொழிலதிபர் ; திருமணம் செய்வதாக மோசடி
சென்னையில் திருமண வரன் தேடும் பெண்களை குறிவைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த கேடி இளைஞரை பொலிசார், அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தொழிலதிபர், சினிமா பிரபலம், தயாரிப்பாளர் எனக் கூறி, பெண்களை மோசடி வலையில் வீழ்த்தி லட்சங்களை கறந்துள்ளார்.

திருமணம் செய்வதாக மோசடி
சென்னையில் தாம்பரம் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் கோபிநாதன். 25 வயதான இவர், தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இயங்கி வரும் திருமண வரன் தேடும் செயலிகளில் தனது பயோ-டேட்டாவை பதிவு செய்துள்ளார்.
தான் ஒரு தொழிலதிபர் என சுய தம்பட்டம் அடித்துக் கொண்ட கோபிநாதன், மேலும், சினிமாத் துறையில் செல்வாக்கான நபர் என கூறியதுடன், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு பிசினஸ்களின் ஈடுபட்டு வருவதாகவும் மேட்ரிமோனியில் பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக, என்ன ஜாதி, மதம் என குறிப்பிட்டு வரன் தேடும் பெண்களிடம், அதே ஜாதி, மதத்தை சார்ந்தவர் என தெரிவித்து அறிமுகம் ஆகியுள்ளார். திருமண வரன் தேடும் செயலியில் கோபிநாதனின் பயோ-டேட்டாவை பார்த்து ஐ.டி. துறையில் இன்ஜினியராக பணியாற்றும் பெண் ஒருவரின் குடும்பத்தினர் பேசியுள்ளனர்.
அதற்கு கோபிநாதன் கிரீன் சிக்னல் காட்டியதும், ஐ.டி. பெண் ஊழியர் இரண்டு மாதங்களாக பேசி வந்துள்ளார். திடீரென ஒருநாள் தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறி, நைசாக அந்த பெண்ணிடம் பணம் பறிக்க தொடங்கியுள்ளார்.
தனது வீட்டு வேலையாளுக்கு அவசர தேவை என முதலில் 20 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். அந்த இளம்பெண்ணும் கேட்ட உடனே எதுவும் கேட்காமல் பணத்தை கொடுத்ததால், மீண்டும் தனது நாடகத்தை அரங்கேற்றி 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை வாங்கியுள்ளார். பணம் பறிப்பதிலேயே குறியாக இருந்த கோபிநாதன், திருமண பேச்சை எடுத்தபோது அதை தட்டிக்கழித்துள்ளார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட இளம் பெண், தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் கோபிநாதனை கண்காணிக்க தொடங்கியுள்ளார். துப்பு துலங்கியதும் அவர் போலி தொழிலதிபர் என்பதும், தன்னைப் போன்று பல்வேறு 12 பெண்களிடம் மோசடி செய்ததும் அம்பலமாகியுள்ளது.
அவரிடம் பறிமுதல் செய்த கணினியில், இளம்பெண்களின் அந்தரங்க வீடியோக்களும் சிக்கியுள்ளன. எனவே, அந்த வீடியோக்களை காட்டி யாரையும் மிரட்டி பணம் பறித்தாரா?, இந்த மோசடியில் வேறு யாரேனுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து, கோபிநாதனை கைது செய்த பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.