பிரபல மகளிர் பாடசாலையொன்றின் அதிபர் நியமனத்தில் பெரும் மோசடி
கிளிநொச்சி பிரபல மகளிர் பாடசாலையொன்றின் அதிபர் நியமனத்தில் பெரும் மோசடி இடம்பெற்றுள்ளதாக சிவசேனை அமைப்பால் வடக்கு மாகாண ஆளுநரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிவசேனை அமைப்பினர் தெரிவித்ததாவது,
இந்த நியமனம் பக்கச்சார்பானது
கிளிநொச்சியில் உள்ள பிரபல மகளிர் பாடசாலையொன்றின் அதிபர் பதவிக்குப் பொருத்தமான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் அண்மையில் கோரப்பட்டிருந்தன.
இந்த நியமனங்களுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து ஒருவரும், கிளிநொச்சியில் இருந்து ஆறு பேருமாக ஒட்டுமொத்தமாக ஏழு பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும் , தகுதி நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அதிபர் பதவிக்கு விண்ணப்பிக்காத அருட்சகோதரியொருவருக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, புள்ளிகள் வழங்கப்பட்டு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பதவி நிலைக்கு விண்ணப்பிக்காத அருட்சகோதரி எவ்வாறு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டார். எந்த அடிப்படையில் அவருக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதில் எமக்குப் பெரும் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
இதைவிட குறித்த பாடசாலைக்கு தரநிலை ஒன்றில் உள்ள அதிபரே நியமிக்கப்படலாம். தர நிலை ஒன்றில் உள்ளவர்கள் எவரும் விண்ணப்பிக்காத பட்சத்தில் தரநிலை இரண்டில் உள்ளவர்கள் நியமிக்கப்படலாம். ஆனால், இவை இரண்டிலும் இல்லாமல், தரநிலை மூன்றில் உள்ளவரே தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே, இந்த நியமனம் பக்கச்சார்பானது மற்றும் தவறானது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. இந்தப் பொருத்தமற்ற நியமனத்துக்காக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் விசாரிக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.