சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுவனின் நிலை! வைரலாகும் புகைப்படம்
சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுவன் தனியாக சிடிஸ்கான் அறையை நோக்கி நடந்து செல்லும் காணொளி சமூக வைத்தளங்களில் வைரலாகிவரும் நிலையில், குறித்த காணொளி கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான சீனாவின் கொள்கை குறித்து கேள்விகளை எழுப்புகின்றது.
தொற்று பரவுவதை தடுப்பதற்காக பாலர்பாடசாலை மாணவர்களை அதிகாரிகள் பெற்றோரிடமிருந்து பிரித்து மருத்துவமனையில் தனிமைப்படுத்துகின்றனர். சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுவன் பாதுகாப்பு உடைகளை அணிந்தவாறு மருத்துவமனையொன்றின் சிடிஸ்கான் பிரிவிற்கு செல்வதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அத்துடன் கொரோனா நோயாளிகளை சீனா கையாளும் விதம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
சீனாவில் தற்போது டெல்டா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள புட்டியான் நகரின் மருத்துவமனையொன்றில் பணியாற்றும் சுகாதார பதிவாளர் ஒருவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். இதனை பார்க்கும்போது எனது மனம் வேதனையால் வலிக்கின்றது என சீனாவின் வெய்போவில் ஒருவர் பதிவிட்டுள்ள அதேவேளை எனது கண்ணில் நீர் வழிகின்றது என இன்னொரு நபர் பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரசின் பல அலைகளை கட்டுப்படுத்த முடிந்ததாக சீனா மார்தட்டிக்கொள்ளும் நிலையில், அதன் நடவடிக்கைளின் மறுபக்கம் குறித்து இந்த வீடியோ காரணமாக பல கேள்விகள் எழுந்துள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பரவல் காணப்படும் பகுதியை முற்றாக முடக்கும் சீனா மிகவேகமாக மில்லியன் கணக்கான மக்களை சோதனையிடுவதுடன் வேகமாக அவர்களையும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களையும் தனிமைப்படுத்துகின்றது.
இம்முறை மாணவர்கள் மத்தியில் பரவல் காணப்படுவதை தொடர்ந்து அவர்கள் தொடர்பில் சீனா கடுமையான நடவடிக்கைகளை கையாள்கின்றது. இதேவேளை சீனாவின் புட்டியானில் கொரோனா வைரஸ் நோயாளிகள் என அடையாளம் காணப்பட்டவர்களில் 57 பேர் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் என கூறப்படுகின்றது.
மேலும் தொற்று பரவுவதை தடுப்பதற்காக பாலர்பாடசாலை மாணவர்கள் போன்றவர்களை அதிகாரிகள் பெற்றோரிடமிருந்து பிரித்து மருத்துவமனையில் தனிமைப்படுத்துகின்றனர். இவ்வாறான நிலையில் வியாழக்கிழமை புட்டியான் அரசாங்கம் கொரோனா நோயாளிகள் வேறு எவருடனும் தனிமைப்படுத்தலிற்கு வரக்கூடாது என அறிவித்த நிலையில் அந்த கொள்கை பின்னர் தளர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பெற்றோருடன் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தனிமைப்படுத்தல் ஹோட்டலில் இந்த வீடியோவை எடுத்த சூ ஜியாஹிங் என்ற மருத்துவ தாதி அம்புலன்ஸ் பல சிறுவர்கள் வந்திறங்கிய வேளை தனது கண்ணில் நீர் திரண்டது என செய்தித்தாளிற்கு தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் பாதுகாப்பு கவசம் அணிந்திருந்ததாகவும், வீடுகளில் இருந்து வரவிரும்பாததால் அவர்கள் அழுதபடி தாமதமாக வந்ததாகவும் அவர் தெரிவித்தார். அதோடு அவர்களை வற்புறுத்தியே அம்புலன்ஸில் ஏற்றியுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
மருத்துவமனைக்கு வந்துசேர்ந்ததும் அவர்கள் தாங்களாகவே சிடி ஸ்கான் அறையை நோக்கி சென்றபோதும், அவர்களில் சிலரால் மேசையில் ஏறமுடியவில்லை என்பதனால் மருத்துவர்களே அவர்களை ஏற்றிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.