யாழில் நான்கு கடற்தொழிலாளர்கள் மாயம்; தேடுதல் பணிகள் தீவிரம்
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற நான்கு கடற்தொழிலாளர்கள் காணாமல் போயுள்ள நிலையில் தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலிற்கு 2 படகுகளில் 4 தொழிலாளர்கள் சென்றனர்.

பருத்தித்துறை - முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து நேற்று முந்தினம் (27) புதன்கிழமை கடலுக்கு சென்ற தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த கதிர்காமம் சோதிலிங்கம் (வயது 52), சுமியோம்பிள்ளை சுஜிக்குமார் (வயது 37) மற்றும் கற்கோவளம் பகுதியை சேர்ந்த சேர்ந்த பாலச்சந்திரமூர்த்தி இராமகிருஸ்ணன் (வயது 54) மற்றும் அவரது மகனான இராமகிருஸ்ணன் ரவிராஜ் ஆகியோர் காணாமல் போயுள்ளனர்.
குறித்த நால்வரும் கரை திரும்பாத நிலையில் அவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
தற்போது கடுமையான காற்று வீசி வருவதனால் படகுகள் கடலில் அடிபட்டு திசை மாறி சென்று இருக்கலாம் என அஞ்சப்படுகிறது