ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்: ஆச்சரியத்தை ஏற்படுத்திய தகவல்
கர்நாடகா மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது பாரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா தடசா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரிஸ். இவருடைய மனைவி அல்மாஜ் பானு. கர்ப்பமாக இருந்த அவர், திலக் நகரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை செய்து வந்தார்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அல்மாஜ் பானுவுக்கு நேற்று அதிகாலை திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து அல்மாஜ் பானுவை அவரது குடும்பத்தினர் திலக் நகரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு திடீரென்று ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க வைத்தியர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து அல்மாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது வயிற்றுக்குள் 2 ஆண், 2 பெண் என 4 குழந்தைகள் இருந்தைப் பார்த்து வைத்தியர்கள் ஆச்சரியமடைந்தனர்.
இதையடுத்து வைத்தியர்கள் அறுவை சிகிச்சை செய்து 4 குழந்தைகளையும் வெளியே எடுத்தனர்.
தற்போது தாயும், 4 சேய்களும் நலமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
சிவமொக்கா தனியார் வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.