போட்டியின் இறுதியில் மோதல் ; வைபவ் சூரியவன்ஷிக்கு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் தலைவர் அறிவுரை
தம்புள்ளையில் நடைபெற்ற இந்தியா 'ஏ' மற்றும் இலங்கை 'ஏ' அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றிருந்தது.
போட்டியின் இறுதியில் இந்திய 'ஏ' அணி வீரரான வைபவ் சூரியவன்ஷிக்கும் இலங்கை அணி வீரர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டிருந்தமை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் சம்பவம் தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நேரில் சந்தித்து வாழ்த்து
இந்நிலையில் தம்புள்ளையில் நடைபெற்ற இந்தியா 'ஏ' மற்றும் இலங்கை 'ஏ' அணிகளுக்கு இடையிலான போட்டியை தொடர்ந்து, வைபவ் சூரியவன்ஷியை இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் தலைவர் அநுர தென்னகோன் சந்தித்து முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இந்தியா 'ஏ' இலங்கை 'ஏ' மற்றும் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிகளுக்கு இடையிலான முத்தரப்புத் தொடரின் போட்டியைக் காண்பதற்காக வருகை தந்திருந்த அநுர தென்னகோன் போட்டி முடிவடைந்த பின்னர், மைதானத்தில் வைபவ் சூரியவன்ஷியை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளையும் ஊக்கத்தையும் தெரிவித்தார்.
அண்மையில் ஐபிஎல் தொடரில் சூரியவன்ஷியின் அதிரடி ஆட்டம் குறித்துப் பாராட்டிய தென்னகோன், அவரை "ஒரு தலைமுறையில் ஒருமுறை மட்டுமே பிறக்கக்கூடிய அசாத்திய திறமை கொண்ட வீரர்" என விவரித்தார்.
"நீங்கள் உங்களது விளையாட்டைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். வெளியே இருந்து சமூகம் மற்றும் ஊடகங்கள் மூலம் உங்களுக்காக உருவாக்கப்படும் தேவையற்ற பேச்சுகளையும் சத்தங்களையும் முற்றிலும் மறந்துவிடுங்கள்.
துரதிர்ஷ்டவசமாக உங்களால் இன்றைய போட்டியில் பெரிய அளவில் ஓட்டங்களைக் குவிக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அதுதான் விளையாட்டின் இயல்பு, உங்களால் ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாக விளையாட முடியாது."என அறிவுரை வழங்கினார்.