புதிய ஜனாதிபதி அநுரவுக்கு முன்னாள் ஜனாதிபதிகள் வாழ்த்து
புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது வாழ்த்து செய்தியில், 'சமூக பொருளாதாரம், அரசியல் மற்றும் ஜனநாயக அரசாட்சி உள்ளிட்ட துறைகளில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன.
அவற்றிலிருந்து இலங்கையை மீட்டு நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.' எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்து செய்தியில், 'இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எனது வாழ்த்துக்கள்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதிலும் ஐக்கியமான மற்றும் பலமான இலங்கையை உறுதி செய்வதிலும் அவர் வெற்றியடைய வாழ்த்துகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தனது வாழ்த்து செய்தியில், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் ஜனநாயக மற்றும் அமைதியான தேர்தலுக்கு வாழ்த்துகள், முக்கியமான பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் அதே வேளையில், புதிய அரசாங்கம் சட்டத்தின் ஆட்சி மற்றும் தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்கான அதன் ஆணையை செயல்படுத்தும் என்று நம்புகின்றோம்.' எனத் தெரிவித்துள்ளார்.
இதே போன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் புதிய ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.