இலங்கையில் விற்க தயாராக உள்ள சொத்துக்கள் தொடர்பில் வெளியான உண்மைத் தகவல்
தன்னை மேற்கோள் காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்த கூற்றை மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும், சபாநாயகருமான மொஹமட் நஷீட் நிராகரித்துள்ளார்.
இலங்கைக்கு உதவுமாறு மாலைத்தீவு சபாநாயகர் மொஹமட் நஷீத் விடுத்த கோரிக்கையை சவூதி அரேபிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் நிராகரித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அண்மையில் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்தார்.
இளவரசர் மொஹமட் பின் சல்மானை அணுகி இலங்கைக்கு உதவுமாறு தான் கோரியதாக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீத் தன்னிடம் கூறினார் என்று ஹர்ஷ டி சில்வா குறித்த ஊடக சந்திப்பில் கூறினார்.
அத்துடன், இலங்கையிடம் சரியான திட்டங்கள் இல்லை என்று குறித்த கோரிக்கையை நிராகரிப்பதாக சவூதி அரேபிய இளவரசர் சபாநாயகர் நஷீடிடம் கூறியதாக ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்தார்.
மேலும், ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதியிடம் நஷீட் பேசியதாகவும், இலங்கை விற்க தயாராக உள்ள சொத்துக்களின் பட்டியலை குறித்த ஜனாதிபதி கேட்டதாகவும் ஹர்ஷ டி சில்வா கூறினார்.
இந்த நிலையில், இலங்கைக்கு உதவுவதற்கு வெளிநாடுகள் தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தன்னை மேற்கோள் காட்டி தெரிவித்த கூற்றுக்கு பதிலளித்த சபாநாயகர் மொஹமட் நஷீட் பல நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக தான் நம்புவதாகவும், மேலும் உதவிகள் கிடைக்கப்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.