விளம்பரத்தை நம்பி இலட்சங்களை இழந்த யாழ். இளைஞன்!
சமூக வலைத்தளங்களில் விலையுயர்ந்த கைபேசி விசேட விலைக்கழில் விற்பனை என்ற போலியான விளம்பரத்தை நம்பி யாழ் இளைஞன் ஒருவர் ஒரு இலட்சத்து எழுபத்தோராயிரம் ரூபாவை இழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
29ஆம் குடியேற்றத்திட்டம், பாண்டிருப்பு - 02, கல்முனை என்ற முகவரியை சேர்ந்த நபர் ஒருவர் விலையுயர்ந்த கைபேசிகள் இருப்பதாகவும், அவற்றை விசேட விலைக்கழிவில் 334,000 ரூபாவுக்கு அதனை வழங்குவதாகவும் கூறி சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ளார்.
பணத்தை அனுப்பி ஏமாந்த பலர்
இந்த விளம்பரத்தை நம்பி பலர் அவரை தொடர்புகொண்டவேளை, கைபேசியை வீட்டுக்கு கொண்டு சென்றே வழங்குவதாக கூறி முற்பணம் கேட்டுள்ளார்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் ஒரு இலட்சத்து எழுபத்தோராயிரம் ரூபாவை இழந்துள்ளார். இது குறித்து நேற்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவைப் பெற்று கல்முனைப் பொலிஸார் ஊடாக குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை இதேபோன்று பலர் அவரது கணக்கு இலக்கத்துக்கு பணத்தை அனுப்பி ஏமாந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை சமூக வலைத்தளங்கள் வெளியாகும் போலியான விளம்பரங்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.