விமான நிலையத்தை பரபரபாக்கிய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்
சட்டவிரோதமாக வெளிநாட்டுச் சிகரெட்டுகளை நாட்டுக்குக் கொண்டு வந்த இருவர், கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக விமான நிலையப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற குறித்த நபர், இன்று திங்கட்கிழமை (19) அதிகாலை 2.13 மணியளவில் ஷார்ஜாவிலிருந்து எயார் அரேபியா விமான சேவையின் G9-587 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த இரண்டு பொதிகளை விமான நிலைய வருகைப் பிராந்தியத்திற்கு அருகில் கைவிட்டு விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது, விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தப் பொதிகளைச் சோதனையிட்டபோது, சுமார் 84 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘பிளாட்டினம்’ வகையைச் சேர்ந்த 35,600 சிகரெட்டுகள் அடங்கிய 178 சிகரெட் கார்ட்டூன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.