தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது
தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான ஷியாமிலா பெரேரா, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக அவர் பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

அதன்படி, தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையில் நியமிக்கப்பட்ட மூன்று அதிகாரிகளை அந்த நிறுவனத்தில் பணியமர்த்துவதற்குப் பதிலாக, அப்போதைய அமைச்சர் ரவி கருணாநாயக்க-வின் அலுவலகத்தில் பணிபுரிய அமர்த்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அது தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் ஷியாமிலா பெரேரா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.