11 தமிழ் இளைஞர்களை வலிந்து காணாமலாக்கிய வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி நடவடிக்கைகள்
11 தமிழ் இளைஞர்களை வலிந்து காணாமலாக்கிய வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி தன்னை கைது செய்வதை நிறுத்தி வைக்க தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கில் நடைபெற்ற வழக்கு நடவடிக்கைகள் தொடர்பிலான சில விடயங்களை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகின்றோம்.
மேற்படி வழக்கில் மைத்திரி & ரணில் அரசாங்கத்தின் சட்ட மா அதிபர் திணைக்களத்தை மிக மோசமாக முன்னாள் கடற்படைத் தளபதியின் சட்டத்தரணி வசை பாடிய பின்னரும் இவ்வழக்கை விசாரித்த CID பொறுப்பதிகாரியை சர்வதேச நாடுகளின் இயக்கத்தில் நடப்பதாக அவர் விமர்சித்த பின்னும் முன்னாள் தளபதியின் சட்டத்தரணியின் கோரிக்கையை ஏற்று முன்னாள் தளபதியை கைது செய்ய மாட்டோம் என மேலதிக மன்றாடியார் நாயகம் மன்றில் வாக்குறுதி அளித்து அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் அவருடைய கைதைத் தடை செய்து இருந்தது
ஆனால் இந்த வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பிலான தாயொருவரின் சார்பில் தோன்றிய ஜனாதிபதி சட்டத்தரணியின் சமர்ப்பணங்களை செய்யக் கூட உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை.
அதே வேளை சட்ட மாஅதிபர் மீது தனிப்பட்ட வசை பாடிய முன்னாள் தளபதியின் சனாதிபதி சட்டத்தரணி அவர்களை உயர் நீதிமன்றம் இடைமறிக்கவில்லை.
இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தால் போல் 'முன்னாள் தளபதி எதனையும் மறைக்க வேண்டியதில்லை.
2008 இல் இவர்கள் யுத்த வீரர்கள். யாரையும் கொலை செய்வதற்கு அவர்களுக்கு அனுமதி இருந்தது' என்று முன்னாள் தளபதியின் சனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் பதிவு செய்த போது அது உயர் நீதிமன்றினால் கண்டிக்கப்பட கூட இல்லை.
இது பொறுப்புக் கூறல் தொடர்பில் இலங்கையின் முறைமைகளின் மிக அடிப்படையான போதாத்தன்மையையும் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் இந்நாட்டின் உயர் நீதிமன்றிற்கு உள்ள கறை படிந்த வரலாற்றையும் பறை சாற்றிய அண்மைய கால சம்பவங்களில் ஒன்றாகும்.
அதே போன்று வடக்கில் கிழக்கில் காணாமலாக்கப்ட்டவர்கள் தொடர்பாக இலங்கை நீதித்துறையின் கரிசனைக்கு மேற்படி வழக்கு ஒரு எடுத்து காட்டாகும்.
இவ்வாறான அனுபவங்களின் அடிப்படையில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் இலங்கை நீதித்துறை குறித்தும் இலங்கை அரசாங்கங்கள் வழங்கும் வாக்குறுதிகள் குறித்தும் சந்தேகம் கொள்ளுவது இயல்பானது.
உண்மையில் மகிந்த ராஜபக்சே அவர்கள் நியமித்த காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் மிக தெளிவாக மேற்படி குற்ற செயல்களோடு தொடர்புடைய சூத்திரதாரிகள் தொடர்பாக தெளிவான சாட்சியங்களை முன் வைத்து இருக்கின்றார்கள் .
மேற்படி ஆதாரங்களை முன்வைத்து சம்பந்தப்பட்ட குற்றாவளிகளை கைது செய்து இருக்க முடியும் . நீதி வழங்கும் பொறிமுறையை ஆரம்பித்து இருக்க முடியும்,ஆனால் எதுவும் நடக்கவில்லை.
தற்போது மேற்படி சம்பவங்களின் சூத்திரதாரியாக கருதப்படும் கோத்தபாயா ராஜபக்சே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.100,000 இழப்பீடு தருவதாக சொல்லுகின்றார்.
இது மாத்திரமின்றி மைத்திரி & ரணில் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட 2016 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாடுகளின்படி, மரணச்சான்றிதழ்களையும் வழங்க தீர்மானித்து இருக்கின்றார்,ஆனால் இது இடைக்கால தீர்வு என்கிறார்.
பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு 13 ஆண்டுகளுக்கு பின்னர் மரண சான்றிதல்கள் வழங்கி விட்டு கோட்டாபய ராஜபக்சே சம்பந்தன் தரப்புக்கு வழங்கிய உண்மையைக் கண்டறியும் பொறிமுறை மற்றும் காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தல் அகிய வாக்குறுதிகளை எந்த அடிப்படையில் பாதிக்கப்பட்டவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் ?
உலகில் எங்காவது மரண சான்றிதழ்கள் வழங்கி விட்டு விசாரணை நடக்கும் சொல்லுவார்களா ?
அதே போல பாதிக்கப்ட்டவர்களின் உறவுகள் சம்பந்தன் தரப்பின் மீது முன்வைக்கும் விமர்சனங்களை உங்களால் புரிந்து கொள்ள முடியமால் இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது.
உங்களுக்கு தெரியுமா ? மேற்படி வழக்கு நடைபெற்ற சம காலத்தில் இலங்கையின் நீதித்துறை இலங்கையின் சனநாயக பாரம்பரியத்தை பாதுகாத்தமையை பாராட்டும் முகவுரை பந்தியை உள்ளடக்கி இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசமளித்து தீர்மானம் ஒன்று ஐ. நா மனித உரிமை பேரவையில் கொண்டு வந்து இருந்தது.
அந்த தீர்மானத்திற்கு மைத்திரி & ரணில் அரசாங்கம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து ஆதரவு வழங்கி இருந்தார்கள். இது நியாயமானதா ?
இதனால் சாதித்தது என்ன ?
இது மாத்திரமின்றி மைத்திரி & ரணில் அரசாங்கம் தமிழரசு கட்சி பாராளமன்ற உறுப்பினர்களின் துணையுடன் நீதிமன்ற அதிகாரமுமற்ற காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றை உருவாக்கி இருந்தார்கள்.
குறித்த அலுவலகத்தால் கண்டு பிடிக்கப்படும் எந்தவொரு விடயமும் குற்றவியல் அல்லது சிவில் சட்ட மீறல் சம்பந்தமான குற்றத்திற்கு வழிவகுக்காது என உள்நாட்டில் அறிவித்த மைத்திரி & ரணில் அரசாங்கம் சர்வதேச ரீதியாக காணாமல் போனார் அலுவலகத்தை சாட்சியாக வைத்து காணாமல் போனோர் தொடர்பாக சர்வதேச ரீதியாக எழுந்த அழுத்தங்களை நீர்த்து போக செய்து இருந்தார்கள் . இதற்கு சம்பந்தன் தரப்பு துணை போனது நியாயமானதா ?
சரி, காணாமல் போனோர் அலுவலகம் சாதித்தது என்ன ?
எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா ?
தனிப்பட்ட ரீதியாக ஒரு வாக்காளராக எங்கள் எல்லோருக்கும் ஓர் அரசியல் மட்டுமல்ல - குறிப்பிட்ட கட்சி தெரிவும் இருக்கும்.
அதற்காக பாதிக்கப்பட்ட மக்களை அறமின்றி கொச்சைப்படுத்தும் அதிகாரத்தை உங்களுக்கு தந்தது யார் ?