முன்னாள் எம்.பி மீது துப்பாக்கிச்சூடு ; CIDக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
அநுராதபுர மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதிக்க பிரேமரத்னவின் சிற்றூர்ந்து மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், சட்ட மாஅதிபரின் ஆலோசனையை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு, அனுராதபுரம் கூடுதல் நீதவான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விசாரணை தொடர்பான ஆலோசனை
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் கடந்த பிப்ரவரி 17 ஆம் திகதி அறிவுறுத்தல்களுக்காக, சட்ட மாஅதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் இதுவரை குறித்த விசாரணை தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.
நீண்ட காலத்திற்கு பின்னரும் இந்த வழக்கு தொடர்பாக சட்ட மாஅதிபரின் அறிவுறுத்தல்களை பெற தவறியதால் தனது கட்சிக்காரர் பாதிக்கப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகரின் சட்டத்தரணி தெரிவித்தார்.
உதிக்க பிரேமரத்னவின் சிற்றூர்ந்து மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ மஹநாம விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.