ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கபில சந்திரசேன சடலமாக மீட்பு ; இலங்கையில் பரபரப்பு
Update : ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்புப்பிட்டிய, பெதரிசு பிளேஸ், எண் 38-ல் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு. உட்லர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எயார்பஸ் விவகாரத்தில் கபில சந்திரசேனவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (7) உத்தரவிட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஏர்பஸ் ஒப்பந்தம்
ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன கடந்த மார்ச் 12 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார்.
எயார்பஸ் (Airbus) விமானக் கொள்வனவின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர் கடந்த 5 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் கபில சந்திரசேனவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (7) உத்தரவிட்டமை குறிப்பிடதக்கது.
பிணை நிபந்தனைகளை சந்திரசேன மீறியதாகக் கூறி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் இந்த பிடியாணை உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
தேசிய விமான நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், கடந்த மார்ச் 12 ஆம் திகதி சந்திரசேன கைது செய்யப்பட்டார்.
பின்னர், கடந்த செவ்வாய்க்கிழமை (05) கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது. அப்போது, 500,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்காக இரு நபர்களுக்கு தலா 15,000 ரூபாய் பணம் வழங்கி, அவர்களை பிணையாளர்களாக சந்திரசேனவை முன்னிறுத்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
இந்தச் செயல் நீதிமன்றம் அவர் மீது வைத்த நம்பிக்கையை மீறுவதாகும் என சுட்டிக்காட்டிய ஆணைக்குழு, 1997-ஆம் ஆண்டின் 30-ஆம் இலக்க பிணைச் சட்டத்தின் கீழ் அவரது பிணையை இரத்து செய்து, வழக்கு முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரியது.
இதனையடுத்தே சந்திரசேனவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
2013-ஆம் ஆண்டு 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 விமானங்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தின் போது, 16 மில்லியன் அமெரிக்க டொலரை இலஞ்சமாகப் பெற சதி செய்ததாகவும், அதில் 1.45 மில்லியன் யூரோக்களை சிங்கப்பூரில் உள்ள வங்கிக் கணக்கில் பெற்றதாகவும் சந்திரசேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புரூணையில் தனது மனைவியின் பெயரில் ஒரு போலி நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலமாக சிங்கப்பூர் வங்கிக் கணக்கிற்கு இந்தப் பணத்தைப் பெற்றதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சந்திரசேன முன்னதாக 2020 பெப்ரவரி மாதமும் இதே போன்ற ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.